Search My BLogs

Thursday, January 21, 2010

திருச்செந்தூர் முருகா! திருவருள் புரிவாய்!

கள்ளவிழும் மலர்சூழக் கந்தா! நின் திருச்செந்தூர்
கடம்பவனம் போல மிளிரும்
கடலலைகள் நினதடியைக் காணமிக தவம்செய்து
காவடிபோல் எழுந்தாடிடும்!

துள்ளிவரும் வேல்சுழலத் தொடர்ந்தபல அசுரர்களைத்
தூள்தூளாய் அழித்த முருகா!
தொலையாத வினையகல நினதுபெயர் உரைப்பவர்முன்
தோன்றியருள் செய்யுமழகே!

பள்ளிகொண்ட பெருமான் நின் படைத்திறலைப் போற்றியுமை
பங்கன்மகன் எனப்புகழுவார்
பக்கமிரு தேவியரும் துணை நின்று நின்பெருமை
பாடியருள் பாலிப்பராம்!

வள்ளிதெய் வானையுடன் செந்தூரில் நின்றாடும்
வண்ணமயில் மீதூர்பவா
வளர்தமிழில் நினைப்பாட வாயெல்லாம் நறுமணமே
வந்தருள்க செந்தில்வேலா!

(அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருகோவில் குடமுழுக்கு விழா(ஜூலை2,-2009)
அன்று அமரிக்காவிலிருந்து எழுதப்பட்டது.)

No comments:

Post a Comment